முக்கிய தகவல்களை பகிர்ந்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர்..,

விளையாட்டு

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விளையாட்டு விழாவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் சீனிவாச ராஜ் முக்கிய தகவல்களை பகிர்ந்தார்.

கல்லூரி தலைவர் மாலா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் சீனிவாச ராஜ் கலந்து கொண்டார். மேலும், 19 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்கள் அம்பரிஷ் மற்றும் தீபேஷ் ஆகியோரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றினர்.

விழாவின் ஒரு பகுதியாக, கல்லூரி சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் சீனிவாச ராஜ், தமிழக ஜூனியர் கிரிக்கெட் அணி சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். அதேபோல், ரஞ்சிக் கோப்பையை கைப்பற்றுவதை இலக்காக கொண்டு சீனியர் அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.

மேலும், புதிய திறமையான வீரர்களை உருவாக்கும் நோக்கில் மாநிலம் முழுவதும் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Source :arasiyaltoday

Share