செம்போடை வெளி மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

நாகப்பட்டினம்

செய்தியாளர் : விஜய்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு வெளி மாரியம்மன் ஆலய ஆடி உற்சவ திருவிழா பக்தி பரவசத்துடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு அருள் பெற்றனர்.

திருவிழாவை முன்னிட்டு கடந்த ஜூலை 17-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் உற்சவ நிகழ்ச்சிகள் தொடங்கின. அதனைத் தொடர்ந்து தினமும் காத்தவராயன் கதை நிகழ்ச்சி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் அம்மன் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற தீமிதி உற்சவத்தில், விரதம் இருந்து வந்த பக்தர்கள் முதலில் சாட்டையடி பெற்ற பின்னர், பக்தி பரவசத்துடன் தீக்குழியில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். அப்போது பக்தர்கள் “அம்மன் அரோகரா” என பக்தி முழக்கமிட்டபடி தீ மிதித்தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

தொடர்ந்து பெண்களின் கும்மிப்பாட்டு, கோலாட்டம், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றதால் திருவிழா களைகட்டியது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இந்த திருவிழாவில் ஆலய பரம்பரை அறங்காவலர் சுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு அருள் பெற்றனர்

 

<b> Total Views: 13 </b>

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *