செய்தியாளர் :அருண் 90959 25936
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் காரில் கடத்தி வரப்பட்டதாக கூறப்படும் ரூ.30 லட்சம் மதிப்பிலான 60 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, மதுரையைச் சேர்ந்த 30 வயது வாலிபரை கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து துறையூர் காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீசார் துறையூர்–பெரம்பலூர் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கீழகுன்னூபட்டி பிரிவு சாலை அருகே சந்தேகத்திற்கிடமாக வந்த காரை போலீசார் மடக்கி விசாரிக்க முயன்றனர். போலீசார் சோதனை செய்ய முற்பட்டபோது, கார் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் லத்தியால் காரை தாக்கியதில், காரின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து போலீசார் காரை மடக்கிப் பிடித்து, அதனை ஓட்டி வந்த மதுரை கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (30) என்பவரை கைது செய்தனர்.
காரில் போலீசார் சோதனை மேற்கொண்டதில், தலா 2 கிலோ எடை கொண்ட 30 பொட்டலங்களில் மொத்தம் 60 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில், ஒடிசா மாநிலம் பள்ளிகுடா பகுதியில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தபோது துறையூர்–பெரம்பலூர் சாலையில் போலீசாரிடம் கார்த்திக் சிக்கியதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் கைப்பற்றி, கைது செய்யப்பட்ட கார்த்திக்கிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா கடத்தலில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
<b> Total Views: 163 </b>


