நாகப்பட்டினம் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை சார்பில், சர் ஐசக் நியூட்டன் கல்லூரி மாணவ, மாணவியருக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குநர் உத்தரவின்படியும், சென்னை சைபர் கிரைம் பிரிவு காவல் கண்காணிப்பாளர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமணிய பாலச்சந்திரா அறிவுரையின்படியும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் K.K. பாலச்சந்தர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செல்போன் மற்றும் சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து மாணவ, மாணவியருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், OTP மோசடி, போலி செயலிகள் மூலம் கடன் மோசடி, போலி வேலைவாய்ப்பு மோசடி, வங்கி மோசடி, பகுதி நேர வேலை மோசடி, கல்வி உதவித்தொகை மோசடி, Task Job Fraud, Digital Arrest, FedEx Scam, Cyber Slavery உள்ளிட்ட பல்வேறு இணையவழி குற்றங்கள் குறித்து காவல்துறையினர் எடுத்துரைத்தனர்.
சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக, இணையவழி மோசடியில் பணத்தை இழந்தால் தாமதிக்காமல் 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இணையத்தை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும், மோசடி அழைப்புகள் மற்றும் சந்தேகத்திற்குரிய இணையதளங்கள், செயலிகள் மற்றும் குறுஞ்செய்திகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் வலியுறுத்தினர்.


