
திருச்சி, ஜூன் 24:
திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட பாலக்கரை பகுதியில் தமிழக முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

காலை 10 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு துணை சபாநாயகர் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்ததால், காலை முதலே காத்திருந்த பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் கடும் வெயிலில் அவதிப்பட்டனர். நீண்ட நேரம் நிற்க முடியாமல் சில முதியவர்கள் அங்கேயே தரையில் அமர்ந்தனர்.

பின்னர் துணை சபாநாயகர் வருகையைத் தொடர்ந்து அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி தொடங்கியது. ஆனால் கூட்டத்தை ஒழுங்குபடுத்த போதிய ஏற்பாடுகள் செய்யப்படாததால், உணவைப் பெற மக்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது.
மேலும், நிகழ்ச்சியால் பாலக்கரை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் சாலையில் சிக்கித் தவித்தனர். நிகழ்ச்சிக்காக முன்கூட்டியே டோக்கன்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும், பலருக்கு உரிய நேரத்தில் உதவிகள் கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நலத்திட்ட உதவிகளை முறையாக திட்டமிட்டு வழங்க வேண்டும் என்றும், மக்களை சிரமப்படுத்தும் வகையிலான நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என்றும் விழா ஏற்பாட்டாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பிறந்தநாள் விழா என்ற பெயரில் போதிய திட்டமிடல் இல்லாமல் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு மற்றும் அதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
<b> Total Views: 51 </b>

