குன்னம் தொகுதியில் பாரிவேந்தர் – ஜி.கே. வாசன் தீவிர பிரச்சாரம்

பெரம்பலூர்

செய்தியாளர் சுபாஷ் செல்வம்

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், குன்னம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆலத்தூர் கிழக்கு ஒன்றியத்தின் காரை கிராமத்தில், இந்திய ஜனநாயகக் கட்சி (IJK) வேட்பாளர் சரண்யா அன்பழகனுக்கு ஆதரவாக ஐஜேகே தலைவர் டாக்டர் பாரிவேந்தர் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் இணைந்து தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

முன்னதாக ஆலத்தூர் கேட் பகுதியில் இருந்து இருசக்கர வாகனப் பேரணியுடன் பாரிவேந்தர் மற்றும் ஜி.கே. வாசனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரச்சாரத்தின் போது ஜி.கே. வாசன் பேசுகையில், குன்னம் தொகுதி கிராமங்கள் அதிகம் கொண்ட பகுதி என்றாலும் எதிர்பார்த்த அளவில் வளர்ச்சி பெறவில்லை எனக் குற்றம்சாட்டினார். விவசாயம் முக்கிய தொழிலாக இருந்தும், விவசாயிகள் முன்னேற்றம் அடையவில்லை என்றும், தொகுதி வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பொறுப்புடன் செயல்படவில்லை என விமர்சித்தார். திமுக அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், மாற்றம் அவசியம் என்றும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து டாக்டர் பாரிவேந்தர் பேசுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் குன்னம் தொகுதி மக்கள் பல சிரமங்களை சந்தித்துள்ளனர் என தெரிவித்தார். மக்கள் தேவைகளை நிறைவேற்ற சரண்யா அன்பழகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். திமுக அரசு 2021 தேர்தலில் அளித்த பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், நீட் தேர்வு ரத்து, நகைக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஐஜேகே மாநில பொதுச் செயலாளர் சண்முகம், மாவட்டத் தலைவர் எம்.டி. அன்பழகன், ஆலத்தூர் அதிமுக ஒன்றிய செயலாளர் என்.கே. கர்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பலர் கலந்து கொண்டனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *