நாகப்பட்டினத்தில் மகளிர் தொழில் முனைவோர் தேர்வு நேர்காணல்: மாவட்ட ஆட்சியர் திரு.கே.ஜே.பிரவீன் குமார் பங்கேற்பு

நாகப்பட்டினம்

செய்தியாளர்: விஜய்

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம் மற்றும் தமிழ்நாடு ஊரக தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்கும் நிறுவனம் (TN-RISE) சார்பில் மகளிர் தொழில் முனைவோரைத் தேர்ந்தெடுக்கும் நேர்காணல் முகாம் இன்று (28.07.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஊரகப் பகுதியைச் சேர்ந்த திறன்மிகு மகளிர் தொழில்முனைவோரைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்பம், நிதியுதவி, வழிகாட்டுதல் மற்றும் சந்தை வாய்ப்புகளை வழங்கி தொழில் வளர்ச்சி அடையச் செய்வதை நோக்கமாகக் கொண்டு TN-RISE செயல்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் (25.06.2026) நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்ற 200-க்கும் மேற்பட்டோரில் இருந்து, முதற்கட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் 65 மகளிர் தொழில்முனைவோர் அடுத்தகட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்டனர். இதில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 30 பேர், மயிலாடுதுறையைச் சேர்ந்த 18 பேர், திருவாரூரைச் சேர்ந்த 12 பேர் மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த 5 பேர் அடங்குவர்.
இவர்களுக்கான இறுதித் தேர்வு நேர்காணல் இன்று நடைபெற்றது. கல்வி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் துறை நிபுணர்கள் அடங்கிய நடுவர் குழுவினர் நேர்காணல் மூலம் இவர்களை மதிப்பீடு செய்தனர். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அவர்களின் தொழில் நிலைக்கு ஏற்ப முன்-வளர்ப்பு, தொழில்முனைவு வளர்ப்பு அல்லது தொழில் விரைவாக்கம் ஆகிய பிரிவுகளில் தொடர் ஆதரவு வழங்கப்படும்.
நிகழ்வில் பேசிய மாவட்ட ஆட்சியர், அரசு வழங்கும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி ஊரக மகளிர் தங்களது பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த மகளிர் சுயஉதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருட்களை அவர் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட செயல் அலுவலர் திரு.வேல்முருகன், மகளிர் திட்ட இயக்குநர் திரு.நாநிலதாசன், TN-RISE திட்டத் தலைவர் திரு.ஜெகன்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *