“ஓட்டு கேட்க மட்டும் வந்தாரா?” — துறையூர் எம்.எல்.ஏ.வை பார்த்ததே இல்லை என குமுறும் பச்சமலை மக்கள்!

துறையூர்

“மலைவாழ் மக்கள் தானே என்ற அலட்சியமா?” — 7 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த சாலை மறியல்; அடிப்படை வசதிகளுக்காக போராடும் 32-க்கும் மேற்பட்ட கிராம மக்கள்

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பச்சமலையில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி 300-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டம், அதிகாரிகளின் பேச்சுவார்த்தை தாமதத்தால் 7 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

துறையூரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பச்சமலை பகுதியில், வண்ணாடு மற்றும் கோம்பை ஊராட்சிகளுக்கு உட்பட்ட 32-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மூலக்காடு முதல் செம்புலிச்சாம்பட்டி வரையிலான மலைப்பாதையை பிரதான போக்குவரத்து சாலையாக பயன்படுத்தி வருகின்றனர்.

பல ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி காணப்படும் இந்த சாலை, தற்போது குண்டும் குழியுமாகவும், போக்குவரத்துக்கு பெரும் சிரமம் ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்கே சிரமம் ஏற்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

சாலையை சீரமைக்கக் கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 300-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வண்ணாடு பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மரங்களை வெட்டி சாலையில் போட்டு போக்குவரத்தையும் தடுத்தனர்.

“ஓட்டு கேட்க மட்டும் வந்தார்… அதன்பிறகு எங்கே?”

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், துறையூர் சட்டமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான ரவிசங்கர் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,
“தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்பதற்காக எங்களிடம் வந்தார். அப்போது சாலை வசதி, 108 ஆம்புலன்ஸ் வசதி, செல்போன் டவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவதாகவும், எங்களிடம் கையெழுத்து போட்டுக் கொடுத்தார். ஆனால் அதன் பிறகு எங்களை நேரில் சந்திக்கவில்லை. எங்களால் அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இத்தனை ஆண்டுகளாக எங்கள் பிரச்சினைகளை யார் கேட்பது?” என குமுறினர்.

மேலும், “நாங்கள் ஓட்டு போட்டது எங்கள் குற்றமா? எங்கள் பிரச்சினைகளை சொல்ல எம்.எல்.ஏ.வை பார்க்க முடியாத நிலை ஏன்? எம்.எல்.ஏ.வை இங்கு வரச் சொல்லுங்கள்” என அதிகாரிகளிடம் ஆவேசமாக முறையிட்டனர்.

பச்சமலையில் சாலை, ஆம்புலன்ஸ், தொலைத்தொடர்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில், போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால், 300-க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு 7 மணி நேரத்துக்கும் மேலாக போராடிய நிலையிலும், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் நேரில் வந்து மக்களின் குறைகளை கேட்டறியாதது ஏன்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

“மலைவாழ் மக்கள் தானே என்ற அலட்சியமா? அல்லது அவர்களின் பிரச்சினைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறதா?” என சமூக ஆர்வலர்களும், அப்பகுதி மக்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

பச்சமலையில் வாழும் பழங்குடியின மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, போர்க்கால அடிப்படையில் சாலை வசதி, அவசரகால மருத்துவ வசதி, தொலைத்தொடர்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *