
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அடுத்த பச்சபெருமாள்பட்டி ஊராட்சிக்குட்பட்ட குண்டுக்கல் கிராமத்தில், கடந்த 60 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் வசித்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இக்கிராமத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், போதிய குடிநீர் வசதி, தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இதுவரை முழுமையாக கிடைக்கவில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இருள் சூழும் இரவுகள்… அச்சத்தில் மக்கள்!
கொல்லிமலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குண்டுக்கல் கிராமத்தில் இரவு நேரங்களில் விஷப்பூச்சிகள், மலைப்பாம்புகள் உள்ளிட்டவை குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதாகவும், போதிய தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
மேலும், சாலை வசதி மோசமாக இருப்பதால் அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ் கூட கிராமத்திற்குள் வருவதற்கு சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்காக வெளியூர்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தினமும் இந்த சாலையை பயன்படுத்த வேண்டியிருப்பதால், சாலை வசதியின்மையால் கடும் சிரமங்களை சந்தித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
“எங்கள் அப்பா காலத்திலும் அடிப்படை வசதிகள் இல்லை… எங்கள் காலத்திலும் இல்லை. பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த பயனும் இல்லை. எங்களுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும்?” என பொதுமக்கள் வேதனையுடன் கேள்வி எழுப்புகின்றனர்.
அடிப்படை வசதிகள் இல்லாததால் தங்களது அன்றாட வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வாழ்வாதாரத்திற்காக பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாகவும் குண்டுக்கல் கிராம மக்கள் கூறுகின்றனர்.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர், உப்பிலியபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (BDO), பச்சபெருமாள்பட்டி ஊராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குண்டுக்கல் கிராமத்தின் நிலை குறித்து நேரில் ஆய்வு செய்து, குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
60 ஆண்டுகளாக தீராத குண்டுக்கல் மக்களின் அடிப்படை வசதி பிரச்சினைக்கு இனியாவது தீர்வு கிடைக்குமா? என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
