கீரம்பூர் ஏரி உபரி நீரால் 500-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிப்பு – பாலம் அமைக்கக் கோரி மனு

துறையூர்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள கீரம்பூர் பகுதியில் உள்ள ஏரி, மழைக்காலங்களில் நிரம்பி உபரி நீர் வெளியேறும் போது, சூரமாரி ஆற்றுப்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால் கீரம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு தொடர்ந்து பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உபரி நீர் செல்லும் பகுதியில் பாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு காலகட்டங்களில் அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இன்று துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணகுமாரை சந்தித்து, கீரம்பூர் ஏரி உபரி நீர் செல்லும் பகுதியில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர்.

மனுவில், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்து பாலம் அமைக்க வேண்டும் என்றும், மழைக்காலங்களில் ஏற்படும் விவசாய நிலப் பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மருவத்தூர் கமலக்கண்ணன், கீரம்பூர் முத்துசாமி, கிருஷ்ணாபுரம் ராமராஜ், ஜான் கென்னடி, பஷீர், பூபேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

 

<b> Total Views: 28 </b>

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *