அதிகாரிகள் அலட்சியத்தால் 7 மணி நேரம் நீடித்த பச்சமலை சாலை மறியல்!

துறையூர்

“மலைவாழ் மக்கள் தானே” என்ற அலட்சியமா? — அதிகாலையிலேயே வந்த அரசு பேருந்துகள் திரும்பிச் செல்ல முடியாமல் தவிப்பு!

துறையூர், அக்.15:
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பச்சமலையில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி 300-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டம் அதிகாரிகளின் அலட்சியத்தால் 7 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

துறையூரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பச்சமலை பகுதியில், வண்ணாடு மற்றும் கோம்பை ஊராட்சிகளுக்கு உட்பட்ட 32-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தும் மூலக்காடு முதல் செம்புலிச்சாம்பட்டி வரையிலான மலைப்பாதை நீண்ட காலமாக குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது.

இந்த சாலையை சீரமைக்கக் கோரி பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 300-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வண்ணாடு பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மரங்களை வெட்டி சாலையில் போட்டு போக்குவரத்தையும் தடுத்தனர்.

அதிகாலையிலேயே முடங்கிய போக்குவரத்து

போராட்டம் காரணமாக காலை 5 மணியளவில் வந்த 3 அரசு பேருந்துகள் தொடர்ந்து செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டன. பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போக்குவரத்து பாதிப்பால் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மேலும், இந்த சாலை மறியலால் பச்சமலையைச் சேர்ந்த 32-க்கும் மேற்பட்ட கிராமங்களின் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

3 மணி நேரத்திற்குப் பிறகே அதிகாரிகள் வருகை

போராட்டம் தொடங்கிய பின்னரும் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். “மலைவாழ் மக்கள் தானே” என்ற அலட்சியப் போக்கிலேயே அதிகாரிகள் சுமார் 3 மணி நேரம் கழித்து சம்பவ இடத்துக்கு வந்ததாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேதனை தெரிவித்தனர்.

அதிகாரிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால், 7 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போராட்டத்தை அரை மணி நேரத்திலேயே முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

பின்னர் துறையூர் வட்டாட்சியர், முசிறி டிஎஸ்பி மற்றும் துறையூர் வனத்துறை அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

நீண்ட காலமாக சாலை சீரமைக்கப்படாத நிலையில், போராட்டம் வெடித்த பிறகும் அதிகாரிகள் தாமதமாக வந்த சம்பவம் பச்சமலை மலைவாழ் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *