திருச்சி: திமுக அரசை கண்டித்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சி

திருச்சியில் தமிழக அரசின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமைக்கு எதிராக அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் திமுக அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட கழகத்தின் ஏற்பாட்டில், திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் திடலில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் பல்வேறு நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி, புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார், மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மேலும் எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் என்.ஆர். சிவபதி, கழக அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், வளர்மதி, மனோகரன், வெல்லமண்டி நடராஜன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் பேசிய நிர்வாகிகள், தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாகவும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடைபெறும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாகவும் குற்றம்சாட்டினர். மேலும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு அதிகரிப்பது இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கிறது என்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

 

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கை சீர்செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியதுடன், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *