வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னைக்கு தங்க கிரீடம் சூட்டும் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

ஆன்மீகம்

செய்தியாளர்: விஜய் 

 

வேளாங்கண்ணி, மே 30:

புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆரோக்கிய அன்னைக்கு தங்க கிரீடம் சூட்டும் சிறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், கீழை நாடுகளின் “லூர்து நகர்” என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் “பசிலிக்கா” என்ற சிறப்பு அந்தஸ்து பெற்றுள்ள இந்த பேராலயம் வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ளதால் தனிச்சிறப்பு பெற்றதாகும்.

கிறிஸ்தவர்களால் மே மாதம் ஆரோக்கிய அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கடந்த 6-ஆம் தேதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு திருப்பலி, தேர்பவனி மற்றும் திவ்ய நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன.

அதன் நிறைவு நிகழ்வாக ஆரோக்கிய அன்னைக்கு தங்க கிரீடம் சூட்டும் விழா நேற்று பழைய வேளாங்கண்ணி மாதாகுளம் பகுதியில் நடைபெற்றது. முன்னதாக தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

பின்னர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளியிருந்த ஆரோக்கிய அன்னையின் திருவுருவத்திற்கு ஆயர் சகாயராஜ் தங்க கிரீடம் சூட்டி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திவ்ய நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டதுடன், சிலுவைப் பாதையில் தேர்பவனியும் நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஜெபங்களில் ஈடுபட்டனர்.

தேர்பவனி பேராலய கலையரங்கத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. விழாவில் பேராலய அதிபர் இருதயராஜ், பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், நிர்வாக தந்தை பரிசுத்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஆரோக்கிய அன்னையின் அருளைப் பெற்றனர்.

 

<b> Total Views: 6 </b>

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *