
செய்தியாளர் ; விஜய்
நாகப்பட்டினம், ஜூன் 5:
காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாட்டு பகுதியில் புதிய அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகை மாவட்டம் பனங்குடி பகுதியில் விவசாயிகள் இன்று தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் உருவபொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மேகதாட்டு அணை திட்டத்தை முன்னெடுக்க அம்மாநில அரசு உறுதியாக செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். இந்த அணை கட்டப்பட்டால் மேட்டூர் அணைக்கு வரும் காவிரி நீர்வரத்து கடுமையாக பாதிக்கப்படும் என்றும், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் அழியும் அபாயம் உருவாகும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
மேலும், குடிநீர் தேவைகளும் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் எனக் கூறிய விவசாயிகள், தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அதேநேரத்தில், மேகதாட்டு விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு போதுமான அழுத்தம் கொடுக்கவில்லை என குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள், தமிழக அரசின் மௌனத்திற்கும் கண்டனம் தெரிவித்தனர். கர்நாடக அரசுக்கும் தமிழக அரசுக்கும் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய விவசாயிகள், காவிரி உரிமையை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த போராட்டம் காரணமாக பனங்குடி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
<b> Total Views: 30 </b>

