
செய்தியாளர் :விஜய்
நாகப்பட்டினம் | ஜூன் 5
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாபெரும் மரம் நடும் விழா, பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கே.ஜே. பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் வட்டம் தெற்கு பொய்கைநல்லூர் கடற்கரை பகுதியில் நடைபெற்ற மாபெரும் மரம் நடும் விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர், முதல் மரக்கன்றை நட்டு பசுமை இயக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி, மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அமிர்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வரை நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் பசுமையான எதிர்காலம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களுடன் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், “சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொரு மனிதரின் கடமையாகும். சிறுவயதில் எனது பெற்றோரின் ஊக்கத்தால் ஒவ்வொரு பிறந்தநாளிலும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பழக்கத்தை நான் கடைபிடித்தேன். அதுபோல் மாணவர்களும் தங்களது ஒவ்வொரு பிறந்தநாளிலும் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றையாவது நட்டு வளர்க்க வேண்டும். அது எதிர்கால தலைமுறைக்கான மிகப்பெரிய முதலீடாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிவுறுத்தலின்படி ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மாசுபாடு, பருவநிலை மாற்றம் மற்றும் காடழிப்பு போன்ற சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.
இந்நிகழ்வில் வன உயிரினக் காப்பாளர் த.ரமேஷ்வரன், நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் டி.லீனா சைமன், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) வைத்தியநாதன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்தி ஆரோக்கிய மேரி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பி.அனந்த நாராயணன், அமிர்தா வித்யாலயா பள்ளி முதல்வர் ராதாகிருஷ்ணன், தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
“ஒரு மரம் ஆயிரம் உயிர்களுக்கு ஆதாரம்” என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, நாகை மாவட்டத்தில் பசுமை புரட்சிக்கான புதிய தொடக்கமாக அமைந்தது.

