
செய்தியாளர் விஜய்
நாகப்பட்டினம், ஜூன் 17:
நாகப்பட்டினம் மாவட்டம் தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில் வேளாங்கண்ணி அகல புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேளாங்கண்ணி அகல புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக தமிழக அரசு ரூ.76 கோடியே 47 லட்சத்து 68 ஆயிரம் நிதி ஒதுக்கியுள்ளது. இதற்காக நில அளவீட்டு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் வந்தபோது, சாலை அமைக்கப்பட உள்ள பகுதிகளில் விவசாய நிலங்கள், மா மற்றும் தென்னை தோப்புகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட உள்ளதாக கூறி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தகவலறிந்து மாநில நெடுஞ்சாலைத் துறையின் தனி தாசில்தார் அமுதா, வருவாய்த் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிராம மக்கள், சாலை திட்டத்தால் சுமார் 400 காய்ப்புள்ள மாமரங்கள், 80 தென்னை மரங்கள், 40 பனை மரங்கள், 20 வீடுகள் மற்றும் பல கட்டிடங்கள் அகற்றப்பட வேண்டிய நிலை உருவாகும் என்றும், விவசாய நிலங்கள் அழிவதால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், விவசாய நிலங்களையும் குடியிருப்புகளையும் பாதிக்கும் வகையில் சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
<b> Total Views: 110 </b>

