திருச்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி: மேயர் அன்பழகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

திருச்சி

செய்தியாளர்:அருண் 90959-25936

 

திருச்சி, ஜூலை 29: திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் திருச்சி மாநகராட்சி கட்டுமான பொறியாளர்கள் சங்கம் இணைந்து, அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பதன் அவசியத்தை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை புதன்கிழமை நடத்தினர்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் அன்பழகன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பேரணியில், கட்டுமான பொறியாளர்கள் சங்கத் தலைவர் விஸ்வநாத், மாநகராட்சி சுகாதார அலுவலர் கார்த்திகேயன், சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் ஷேக் அப்துல்லா, சங்கத்தின் முன்னாள் தலைவர் கார்த்திக் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுமான பொறியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

பேரணி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு தலைமை தபால் நிலையம், மேலபுதூர், பாலக்கரை, மதுரை சாலை, சத்திரம் பேருந்து நிலையம், கரூர் புறவழிச்சாலை, தில்லைநகர் பிரதான சாலை, தென்னூர் நெடுஞ்சாலை, புத்தூர் சந்திப்பு மற்றும் நீதிமன்றம் வழியாகச் சென்று மீண்டும் மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

பேரணியின்போது, அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், சுற்றுச்சூழலை பாதுகாக்க மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி மூலம் பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைத்து, தூய்மையான மற்றும் பசுமையான நகரத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *