காவிரியில் தண்ணீர் இன்றி வறண்ட நிலை: திருவானைக்காவல் தெப்பக்குளத்தில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பு

திருச்சி

திருச்சி, ஆக. 1:

கர்நாடகா அரசு, காவிரி நீர்ப் பங்கீட்டின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை இதுவரை திறந்துவிடாததால், மேட்டூர் அணையில் இருந்து காவிரிக்கு நீர் திறக்கப்படவில்லை. இதன் விளைவாக திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்து, பல இடங்களில் ஆறு வறண்ட நிலையில் காணப்படுகிறது.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டால், ஆடி மாதத்தில் காவிரி ஆறு முழுவதும் நீர் பெருக்கெடுத்து ஓடும். இதன் காரணமாக திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலின் தெப்பக்குளமும் இயற்கையாகவே நிரம்பும்.

ஆனால், இந்த ஆண்டு காவிரியில் போதிய நீர் இல்லாததால், திருவானைக்காவல் கோவிலின் தெப்பக்குளம் நிரம்பாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி நடைபெற உள்ள ஆடிப்பூர தெப்ப உற்சவத்தை முன்னிட்டு, தெப்பக்குளத்தில் மின் மோட்டார்களின் உதவியுடன் தண்ணீர் நிரப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பஞ்சபூதத் தலங்களில் நீர்த் தலமாக விளங்கும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில், காவிரி நீர் இல்லாததால் தெப்பக்குளத்தை மின் மோட்டார் மூலம் நிரப்ப வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *