
தமிழ்நாடு முதலமைச்சர் C. ஜோசப் விஜய் அளித்த வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் நிலம் வரை வைத்துள்ள விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கல்லக்குடியில் மாபெரும் பேரணி மற்றும் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஈசன் முருகசாமி தலைமை தாங்கினார். லால்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்
இந்த போராட்டத்தில் ஆயிரணகணக்கான விவசாயிகள் கல்லக்குடி ராஜா டாக்கீஸ் பகுதியில் இருந்து பேரணியாகப் புறப்பட்டனர். கைகளில் பச்சைக்கொடி மற்றும் கோரிக்கை பேனர்களை ஏந்தியபடி, விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.
தொடர்ந்து, கல்லக்குடி கூட்டுறவு சங்கத்தை அடைந்த விவசாயிகள், அங்குள்ள அதிகாரிகளிடம் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை
அளித்தனர்
மனுவில் சிறு, குறு, பெரு விவசாயிகள் என்ற எந்தவித பாகுபாடும் இன்றி, நிலுவையில் உள்ள அனைத்து பயிர்க்கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
அரசு ஊழியர்கள், கூட்டுறவுப் பணியாளர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் என்ற வேறுபாடின்றி ‘விவசாயி’ என்ற முறையில் அனைவருக்கும் சமமாக கடன் தள்ளுபடி வழங்கிட வேண்டும்.
பெரு விவசாயிகளுக்கு 50% மட்டுமே தள்ளுபடி என்பதை ரத்து செய்து, அனைத்து விவசாயிகளுக்கும் 100% முழு கடன் தள்ளுபடி வழங்க வேண்டும்.
முன்னாள் முதலமைச்சர்களான கலைஞர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் வழங்கப்பட்டது போல, பாகுபாடின்றி விவசாயிகளின் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈசன் முருகசாமி:-
“தேர்தல் பிரசாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க் கடன் முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்களுக்கு 50 சதவீதம் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வாக்குறுதி அளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகும் அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
இதன் காரணமாக கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றுள்ள சுமார் 22 லட்சம் விவசாயக் குடும்பங்கள் கடும் நெருக்கடியில் உள்ளன. வறட்சி, போதிய மழையின்மை, வருமானக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகளால் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலையும், போதிய கொள்முதலும் கிடைப்பதில்லை.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்ளும் அவலநிலை நீடித்து வருகிறது. எனவே, தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றி, விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கை நிறைவேறும் வரை ஒட்டுமொத்த விவசாயிகள் சார்பில் கடனை செலுத்தாமல் போராட்டத்தை முன்னெடுக்க உறுதிமொழி எடுத்துள்ளோம். வரவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்திற்குள் கடன் தள்ளுபடி அறிவிக்கப்படாவிட்டால், சென்னை நகரில் தொடர் காத்திருப்பு போராட்டம் மற்றும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

