கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் இந்திய ஊட்டச்சத்து சங்கத்தின் 58-வது தேசிய மாநாடு!

கோவை

‘உணவு மற்றும் ஊட்டச்சத்து – யாரையும் விட்டுவிடக் கூடாது’ என்ற கருப்பொருளில் 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

கோவை அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில், இந்திய ஊட்டச்சத்து சங்கத்தின் 58-வது தேசிய மாநாடு மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 8-ஆம் தேதி தொடங்கிய இந்த மாநாடு, இன்று (அக். 10) நிறைவடைகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் 2030-ஆம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகளை முன்னிறுத்தி, ‘உணவு மற்றும் ஊட்டச்சத்து – யாரையும் விட்டுவிடக் கூடாது’ என்ற கருப்பொருளில் மாநாடு நடைபெறுகிறது. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு சத்தான உணவு சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது.

மாநாட்டின் தொடக்க விழாவில், அவிநாசிலிங்கம் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும் பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் தி.ச.க. மீனாட்சிசுந்தரம் வேந்தர் உரையாற்றினார். ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குவதில் ஊட்டச்சத்து நிபுணர்களின் பங்களிப்பு முக்கியமானது என அவர் வலியுறுத்தினார்.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் வி. பாரதி ஹரிசங்கர் தொடக்க உரையாற்றினார். தொடர்ந்து, இந்திய ஊட்டச்சத்து சங்கத்தின் செயலாளர் டாக்டர் சுப்பாராவ் ஜி. ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்தார். சங்கத்தின் தலைவர் டாக்டர் சரத் கோபாலன் தலைமை உரையாற்றினார்.

அப்போது, இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தடுப்பது, அனைவருக்கும் சமமான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்வது மற்றும் புதிய ஊட்டச்சத்துப் பொருட்களை உருவாக்குவது ஆகியவை முக்கிய நோக்கங்கள் என அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகப் பதிவாளர் டாக்டர் இந்து வாழ்த்துரை வழங்கினார். பசியற்ற, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க அன்னதானத்தின் கண்ணியம், சமத்துவம் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்கு 2 ஆகியவற்றை ஒருங்கிணைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் ஆ. ஸ்ரீனிவாசன், ‘அனைவருக்கும் ஊட்டச்சத்தை உறுதி செய்தல்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நடைமுறையில் உள்ள ஊட்டச்சத்துத் திட்டங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்வதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

விழாவில் மாநாட்டு மலர் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளர்களால் கண்காட்சி அரங்குகள் திறந்து வைக்கப்பட்டன. மனையியல் புல முதன்மையர் பேராசிரியர் சில்வியா சுப்பிரியா வரவேற்றார். மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பி. ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

இந்தியா முழுவதிலுமிருந்து 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ள இம்மாநாட்டின் ஒரு பகுதியாக, அக்டோபர் 8-ஆம் தேதி உணவுத் தொழில்நுட்பம், சுற்றுச்சூழலுக்கு உகந்த உணவுப் பொட்டலமிடுதல் மற்றும் ஊட்டச்சத்துத் தகவல் தொடர்பு ஆகிய தலைப்புகளில் மூன்று சிறப்புப் பயிலரங்குகளும் நடைபெற்றன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *