அகரம்சீகூர் நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ40–50 வசூல் குற்றச்சாட்டு

பெரம்பலூர்

செய்தியாளர்: சுபாஷ் செல்வம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சுற்றுவட்டாரத்தில் உள்ள அகரம்சீகூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அந்த நிலையத்தில் பணியாற்றி வரும் PC தமிழ்வேந்தன் என்பவர், நெல் மூட்டைக்கு ரூ40 முதல் 50 வரை சட்டவிரோதமாக வசூல் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வசூல் காரணமாக, ஏற்கனவே பல சிரமங்களை சந்தித்து வரும் விவசாயிகள் கூடுதல் நிதிச்சுமையை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அங்கு பணிபுரியும் சில ஊழியர்களும், விவசாயிகளும் கூறுகையில், சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருமையில் பேசுவதோடு, பணம் செலுத்தாதவர்களின் நெல் கொள்முதல் செயல்முறைகளில் தாமதம் ஏற்படுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், தினசரி நெல் கொண்டு வரும் விவசாயிகள் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், குன்னம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பிற நெல் கொள்முதல் நிலையங்களிலும் இதேபோன்ற முறைகேடுகள் நடைபெறுகின்றனவா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் முழுமையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து, குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள PC தமிழ்வேந்தன் மற்றும் சம்பந்தப்பட்ட PO மீது உடனடி துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே நேரத்தில், விவசாயிகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல், அரசு நிர்ணயித்த விதிமுறைகளின் படி நெல் கொள்முதல் நடைபெற உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வமான விளக்கம் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடைபெற்று, உண்மை நிலை வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *