தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறி: 2 பேரை கைது செய்த போலீசார்

பெரம்பலூர்

தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறி: 2 பேரை கைது செய்த போலீசார்

செய்தியாளர்:சுபாஷ் செல்வம்

பெரம்பலூர் அருகே திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தண்ணீர் பந்தல் பெட்ரோல் பங்க் அருகே வாலிகண்டபுரத்தை சேர்ந்த கருப்பையா என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் அருகே திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தண்ணீர் பந்தல் எஸ்.ஆர். பெட்ரோல் பங்க் அருகே, கடந்த மே 6-ம் தேதி இரவு வாலிகண்டபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கருப்பையா என்பவர், இருசக்கர வாகனத்தில் பெரம்பலூரிலிருந்து வாலிகண்டபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கினர். பின்னர், கருப்பையா வைத்திருந்த செல்போன், ரூ.1,300 ரொக்கம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து காயமடைந்த கருப்பையா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் புகார் அளித்தார்.

புகாரை பெற்ற பெரம்பலூர் காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர். விசாரணையில், கோனேரிபாளையத்தை சேர்ந்த அன்வர் மகன் இப்ராஹிம் (19) மற்றும் அய்யலூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஞானப்பிரகாசம் ஆகியோர் இந்த வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களை தேடி வந்த போலீசார் நேற்று இரவு இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், கொள்ளையடிக்கப்பட்ட பைக் பெட்ரோல் இல்லாமல் நின்றுவிட்டதால், அதை நடுக்காட்டில் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. அதையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட இருவரையும் இன்று பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, இருவரும் பெரம்பலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *