
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு சொந்தமான அண்ணா பேருந்து நிலையத்தை புனரமைக்கும் பணிக்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று தற்காலிக பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
ஆனால் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதையொட்டி, பேருந்துகளின் புதிய வழித்தடங்கள் மற்றும் நிறுத்துமிடங்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே முறையான அறிவிப்பு வழங்காததால் வெளியூரிலிருந்து வந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
காலை நேரத்தில் பேருந்து நிலையத்திற்கு வந்த பொதுமக்கள் எந்த பேருந்து எந்த பகுதியில் நிற்கிறது என்பது தெரியாமல் அலைந்தனர். மேலும் தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழலில் நிற்க போதிய வசதிகள் இல்லாததால் கோடை வெயிலில் முதியோர், கைக்குழந்தைகளுடன் வந்த பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் கடும் அவதியடைந்தனர்.
நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு செயல்படாததாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பயணிகளின் பாதுகாப்பையும் அடிப்படை வசதிகளையும் உடனடியாக உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

