
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கோட்டப்பாளையம் புனித மகதலா மரியா திருத்தலத்தின் ஆண்டு பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுமார் 50 அடி உயரமுள்ள பிரமாண்ட தேர் முக்கிய வீதிகள் வழியாக பவனியாக வந்தது. இதில் கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

ஜூலை 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவில், தினமும் சிறப்பு திருப்பலி, சிறிய தேர் பவனி மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பெரிய தேர் பவனியில் திருச்சி, பெரம்பலூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித மகதலா மரியாவை தரிசித்து பிரார்த்தனை செய்தனர்.

தேர் பவனி நிறைவடைந்ததும் தேர் மீண்டும் திருத்தலத்தை வந்தடைந்தது. விழாவையொட்டி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை திருத்தல நிர்வாகம் மற்றும் பங்குமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
<b> Total Views: 42 </b>

