
திருச்சி, மே 20:
திருச்சி மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு நிர்வாகிகள் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் டாஸ்மாக் திருச்சி மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகளை மூட தமிழக முதல்வர் உத்தரவிட்டதன் அடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் 16 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அந்த கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு உடனடியாக மாற்று பணி வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
மேலும், இரவு 10 மணிக்குப் பிறகு கடைகளில் கணக்கு வழக்குகளை முடிக்க காவல்துறையினர் அனுமதி மறுப்பதுடன், உடனடியாக கடையை விட்டு வெளியேறும்படி அச்சுறுத்துவதாகவும் பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த 6 மாதங்களாக அமலில் உள்ள காலி மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தால் பணியாளர்கள் கடுமையான மனஉளைச்சலுடன் பணியாற்றி வருவதாகவும், திட்டம் தொடர்பான சிரமங்களை நிர்வாகம் தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி மதுபாட்டில் திட்டத்தில் ஸ்டிக்கர் பயன்படுத்தப்படுவதால் கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, செல்போனில் வீடியோ எடுத்து புகார் அளிப்பதாகவும், அவற்றை நிர்வாகம் விசாரணையின்றி நம்பி பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், சரக்கு இறக்க கூலி, டேமேஜ் ஆகும் மதுபாட்டில்கள், காலி பாட்டில்களை சேகரிக்க நியமிக்கப்பட்ட பணியாளர்களின் கூலி மற்றும் குடோன் வாடகை உள்ளிட்ட செலவுகளை நிர்வாகமே ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட 5 கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
<b> Total Views: 15 </b>

