
செய்தியாளர் : சுபாஷ் செல்வம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையம் பகுதியில் விசிக மற்றும் திமுக கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மீது கற்கள் மற்றும் கட்டைகளை வீசி தாக்கிக் கொண்ட சம்பவம் காரணமாக பதற்றமான சூழல் நிலவியது.
தவக தலைவர் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்த விசிக கட்சிக்கு, சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் வட்டாரங்களில் விவாதம் ஏற்பட்டது. இதனை ஒட்டி திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி தனது சமூக வலைதளப் பதிவில் மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விசிகவினர் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி குன்னம் பேருந்து நிலையத்தில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதே இடத்தில், விசிக மாவட்ட செயலாளர் அன்பானந்தம் ஆ.ராசாவை தரக்குறைவாக பேசியதாக கூறி திமுக இளைஞர் அணி சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது.

இரு தரப்பினரும் ஒரே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்ததால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என போலீசார் அனுமதி மறுத்து தடை உத்தரவு பிறப்பித்திருந்தனர். இருப்பினும் தடையை மீறி இரு தரப்பினரும் எதிரெதிர் திசைகளில் திரண்டு முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசார் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியபோதும், இரு தரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறி, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதுடன் கற்கள் மற்றும் கட்டைகளையும் வீசி தாக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் மற்றும் அதிரடிப்படை விரைந்து வந்து, இரு தரப்பினரையும் கட்டுப்படுத்தி கலைத்து அனுப்பினர். இந்த மோதலின்போது சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் பாதுகாப்பு கருதி குன்னம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் குன்னம் கடைவீதியில் இருந்த டீக்கடைகள் மற்றும் ஓட்டல்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் போக்குவரத்தும் சில நேரம் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆ.ராசா எம்.பி தனது சமூக வலைதளத்தில், “ஆரோக்கியமான கருத்து மோதலே ஜனநாயகத்திற்கு அரண்; வன்முறை ஜனநாயகத்திற்கு முரண்” என பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.
<b> Total Views: 42 </b>

