
செய்தியாளர்:விஜய்
வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் நேற்று வருகை தந்தார். அப்போது பேராலயத்தில் முழங்கால் இட்டு பிரார்த்தனை செய்த அவர், பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தியும் வழிபாட்டில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மரிய வில்சன் கூறியதாவது:
“ஒவ்வொரு ஆண்டும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்திற்கு வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டு மிகவும் விசேஷமானதாகும். விரைவில் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதால், ஆரோக்கிய அன்னையின் அருளை வேண்டி வழிபாடு நடத்த வந்துள்ளேன்.

தமிழகத்தின் நிதிநிலை குறித்து இரண்டு வாரங்களுக்குள் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக நிதித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தின் நிதிநிலை குறித்து எவ்வித ஒளிவு மறைவும் இன்றி மக்களுக்கு முதல்வர் ஜோசப் விஜய் விளக்கமளிப்பார். மாநிலத்தின் நிதிநிலையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளும் நடைபெற்று வருகின்றன.
மதுரை மாநகராட்சியில் அண்மையில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பாக முழுமையான அறிக்கை கோரப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தணிக்கை அறிக்கைகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.
மகளிர் உரிமைத்தொகை வழங்குவதில் பல்வேறு புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக வட மாநிலங்களைச் சேர்ந்த பெண்களுக்கும் இந்தத் தொகை வழங்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பாக, 2021-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் இறுதிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டத்தைத் தொடர்ந்து, திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக செயல்படுத்தியுள்ளது. ஆனால் 2024-ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி 45 நாட்களுக்குள் தள்ளுபடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த விதிமுறைகளுக்கு ஏற்ப தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்பான விவரங்கள் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது வெளியிடப்படும்.
பிற கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் தவெகவில் இணைவது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் தங்களது விருப்பப்படி எந்தக் கட்சியிலும் இணைய முழு உரிமை கொண்டவர்கள்” என்றார்.
<b> Total Views: 4 </b>

