கலைஞர் 103வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்: துறையூரில் திமுக அரசின் சாதனைகளை விளக்கிய கே.என்.நேரு, கோவி.செழியன்

துறையூர்

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் துறையூரில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் கோவி. செழியன் கலந்து கொண்டு திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விளக்கிப் பேசினர்.

கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, துறையூர் பகுதியின் வளர்ச்சிக்காக திமுக அரசு பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். ரூ.108 கோடி மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டம், புறவழிச்சாலை, புதிய அரசு கல்லூரி உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய கோவி. செழியன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத்தொகை திட்டம், “நான் முதல்வன்” திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதாகவும், அவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைத்து, தொடர்ந்து திமுகவுக்கு ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இப்பொதுக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, சிவ சரவணா, வீரபத்திரன், உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன், அசோகன், பேரூர் கழகச் செயலாளர்கள் நடராஜன், வெள்ளையன், முன்னாள் சேர்மன் சரண்யா மோகன்தாஸ், கஸ்டமர்ஸ் மகாலிங்கம், மாவட்ட பிரதிநிதி மதியழகன், ரெங்கநாதபுரம் கார்த்திக், துறையூர் நகர்மன்ற உறுப்பினர் கார்த்திகேயன், சுதாகர், பிரபு உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

<b> Total Views: 20 </b>

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *