
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வேங்கடத்தனூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் பணியாற்றி வந்த கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷ் (36) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் அடைக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ், 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றி வந்த அவர், கடந்த 4 மாதங்களாக துறையூர் அருகே வேங்கடத்தனூர் கால்நடை மருத்துவமனையில் உதவி மருத்துவராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று வழக்கம்போல் பணிக்கு வந்த அவர், மருத்துவமனையில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற முசிறி துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் மற்றும் துறையூர் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் தலைமையிலான போலீசார், பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 5 ஆண்டுகள் குழந்தை இல்லாததால் மனவருத்தத்தில் இருந்தாரா அல்லது வேறு காரணம் ஏதும் உள்ளதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கால்நடை மருத்துவமனையிலேயே உதவி மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட இந்த சம்பவம் துறையூர் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

