முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமைத்து போராட்டம் நடத்திய கிராம மக்கள்

திருச்சி

செய்தியாளர்:அருண் 90959-25936

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வெள்ளூர் செல்லாயி கோவில் மேடு பகுதியில் புதிய கோழிப்பண்ணை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி கிராம மக்கள் கோட்டாட்சியர் (சப்-கலெக்டர்) அலுவலக வளாகத்தில் சமைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளூர் செல்லாயி கோவில் மேடு பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், குடியிருப்பு பகுதிக்கு அருகில் புதிய கோழிப்பண்ணை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கடும் துர்நாற்றம், சுகாதாரக் கேடு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என அச்சமடைந்த பொதுமக்கள், கோழிப்பண்ணை அமைப்பதை தடுக்கக் கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், தங்களது மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, கோழிப்பண்ணை அமைக்கும் தரப்பினர் தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள், தங்களது ஆடு, மாடுகள் மற்றும் சமையலுக்குத் தேவையான பொருட்களுடன் முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர், “கோழிப்பண்ணை அமைக்கப்படும் பகுதியில் எங்களால் வசிக்க முடியாது; எனவே இங்கேயே தங்கி வாழ்கிறோம்” என்று கூறி, அலுவலக வளாகத்திலேயே அடுப்பு மூட்டி சமையல் செய்து போராட்டத்தை தொடங்கினர்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்தும் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

கோட்டாட்சியர் அலுவலக வளாகத்திலேயே கால்நடைகளுடன் தங்கி, சமையல் செய்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த சம்பவம் முசிறி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *