
திருச்சி: திருச்சி மாநகரம் கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்குச் சொந்தமான லாரி, சஞ்சீவி நகர் அருகே வாடாமல்லி தெருவில் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், லாரி அருகே இருந்த கருவேலச் செடிகளில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. அந்த தீ வேகமாக பரவி அருகில் நிறுத்தப்பட்டிருந்த லாரியையும் சூழ்ந்ததால், லாரி முழுவதுமாக தீக்கிரையாகி சேதமடைந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், லாரி முழுமையாக எரிந்து நாசமானது.

இந்த சம்பவம் தொடர்பாக கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கருவேலச் செடிகளில் ஏற்பட்ட தீயால் லாரி எரிந்ததா அல்லது மர்ம நபர்கள் லாரிக்கு தீ வைத்தார்களா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

