துறையூர் நகர்மன்றத்தில் பரபரப்பு… குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து திமுக வாக்அவுட்!

துறையூர்

 

செய்தியாளர்: அருண் 9095925936

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் நகர்மன்ற கூட்டம்  நகர்மன்றத் தலைவர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சியின் நிர்வாகம், வளர்ச்சிப் பணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

கூட்டத்தின் போது, துறையூர் நகராட்சி சார்பில் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீருக்கான கட்டணம்  உயர்த்தப்பட்டிருப்பது குறித்து திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த கட்டண உயர்வு பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் என்றும், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இவ்வாறு கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது ஏற்க முடியாதது என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், குடிநீர் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், நகராட்சி ஆணையரின் நடவடிக்கையை கண்டிப்பதாகவும் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து திமுகவைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் நகராட்சி அலுவலக வளாகத்தில் திரண்ட அவர்கள், நகராட்சி ஆணையருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகராட்சி அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இந்த சம்பவம் துறையூர் நகராட்சி அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

 

<b> Total Views: 128 </b>

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *