போலி தொழிலாளர்களை நீக்கி உண்மையான கட்டுமானத் தொழிலாளர்களை நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் – தமிழக அரசுக்கு கோரிக்கை

நாகப்பட்டினம்

செய்தியாளர் : விஜய்

தமிழக கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் 27-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் புதிய மாநில நிர்வாகிகள் பதவியேற்பு விழா நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் எஸ். துரையரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கட்டுமானத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் புதிய நிர்வாகிகள் பதவியேற்று, தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதுடன் சங்க வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட உறுதியேற்றனர். மேலும், கல்வி உதவி, திருமண நிதியுதவி, விபத்து நிவாரணம் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை அனைத்து தொழிலாளர்களும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில பொதுச் செயலாளர் எஸ். துரையரசன், கட்டுமானத் தொழிலாளர்கள் அனைவரையும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும், போலி கட்டிடத் தொழிலாளர்களை கண்டறிந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், முகவர்கள் இல்லாமல் நேரடியாக பதிவு செய்யும் எளிய நடைமுறையை அரசு அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

அதேபோல், தற்போது வழங்கப்படும் மாத ஓய்வூதியத்தை ₹1,200-லிருந்து ₹3,000 ஆக உயர்த்த வேண்டும், ஓய்வூதியதாரர் உயிரிழந்தால் அவரது வாரிசுகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும், திருமண நிதியுதவியை ₹20,000-லிருந்து ₹50,000 ஆகவும், இயற்கை மரண நிவாரணத் தொகையை ₹55,000-லிருந்து ₹1 லட்சமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் தமிழக அரசிடம் முன்வைத்தார்

 

<b> Total Views: 13 </b>

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *