வறண்ட வாய்க்காலில் ஆடிப்பெருக்கு… நீச்சலடித்து விவசாயிகள் போராட்டம்!

நாகப்பட்டினம்

செய்தியாளர் : விஜய்

நாகை, ஆக. 3:

நாகப்பட்டினம் மாவட்டம் பனங்குடி கிராமத்தில், காவிரி நீர் வராததால் வறண்டு கிடக்கும் பாசன வாய்க்காலில் ஆடிப்பெருக்கு விழாவை விவசாயிகள் மற்றும் பெண்கள் நூதன முறையில் கடைப்பிடித்து தமிழக அரசின் கவனத்தை ஈர்த்தனர்.

வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால், பூ, பழம் வைத்து படையலிட்டு, விளக்கேற்றி பெண்கள் வழிபாடு நடத்தினர். மேலும், பெண்கள் கழுத்திலும், ஆண்கள் கைகளிலும் மஞ்சள் கயிறு கட்டி பாரம்பரிய சடங்குகளை மேற்கொண்டனர். கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் வராததால் குடங்களில் தண்ணீர் எடுத்துவந்து வழிபாடு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

ஆறுகள், குளங்கள் மற்றும் குட்டைகள் அனைத்தும் வறண்டு காணப்படுவதால், பாத்திரங்களில் தண்ணீர் வைத்து சடங்குகளை செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர்.

தொடர்ந்து, வறண்டு கிடந்த பாசன வாய்க்காலில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பாலையூர் எஸ்.ஆர். தமிழ்செல்வன், நீச்சல் அடிப்பது போல் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு, கடைமடை பகுதிகளுக்கு உடனடியாக காவிரி நீரை கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தப் போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் விஜயராஜ், மாவட்டச் செயலாளர் சக்திவேல், விவசாயிகள் மற்றும் விவசாயப் பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

<b> Total Views: 20 </b>

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *