நீட் தேர்வில் 599 மதிப்பெண்கள்: அரசு பள்ளி மாணவர் தரவரிசையில் நாகை தினேஷ் முதலிடம்

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் : வேதாரண்யம் வட்டம் பெரியகுத்தகை கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் மு.தினேஷ், நீட் 2026 தேர்வில் 599 மதிப்பெண்கள் பெற்று, தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டு தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் பயின்ற தினேஷின் சாதனையை பாராட்டும் வகையில், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (11.08.2026) பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாணவர் தினேஷுக்கு பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த முருகையன் – உமாராணி தம்பதியரின் மகனான தினேஷ், தனது பள்ளிப் படிப்பை பெரியகுத்தகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையும், தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளையும், நாகப்பட்டினம் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளையும் முடித்துள்ளார்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 475 மதிப்பெண்களும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 554 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.

கடந்த 2025ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தினேஷ் 379 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பு கிடைக்காத நிலையில், மனம் தளராமல் ஓராண்டு இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் நீட் தேர்வுக்கு தீவிரமாக தயாரானார்.

இதன் பலனாக, 2026ஆம் ஆண்டு நீட் தேர்வில் 599 மதிப்பெண்கள் பெற்று, கடந்த ஆண்டை விட 220 மதிப்பெண்கள் கூடுதலாக பெற்றுள்ளார். மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டு தரவரிசையில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

மாணவர் தினேஷை பாராட்டிய மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், அவரது வெற்றி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாகவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், நாகப்பட்டினம் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி கடந்த 2022ஆம் ஆண்டு முதல் ஏழை மற்றும் எளிய மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், அந்தப் பள்ளியில் பயின்ற மாணவர்களில் 2022-23ஆம் கல்வியாண்டில் 8 பேரும், 2023-24ஆம் கல்வியாண்டில் 3 பேரும், 2024-25ஆம் கல்வியாண்டில் ஒருவரும் என மொத்தம் 12 மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்வி பயின்று வருவதாகவும் தெரிவித்தார்.

தினேஷின் வெற்றிக்கு அவரது பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர். அவரைப் போன்று மேலும் பல அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் சாதித்து, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமண்ய பாலசந்திரா, மாவட்ட வருவாய் அலுவலர் வ.பவணந்தி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் நா.உமாமகேஸ்வரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரவிச்சந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *