நாகையில் ‘போதையில்லா தமிழ்நாடு’ பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு

நாகப்பட்டினம்

செய்தியாளர் : விஜய்

கல்லூரி மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

நாகப்பட்டினம், ஆக.11:
தமிழ்நாட்டை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் நோக்கில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற ‘போதையில்லா தமிழ்நாடு’ பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது.

இதில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன்குமார், இ.ஆ.ப., கலந்து கொண்டு கல்லூரி மாணவ, மாணவிகளுடன் இணைந்து போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், போதைப்பொருள் பயன்பாடு சமுதாயத்திற்கு மிகப்பெரிய எதிரியாக உள்ளது. போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எதிர்கால தலைமுறையினருக்கு நல்ல மற்றும் பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்குவது நம் அனைவரின் பொறுப்பு என தெரிவித்தார்.

 

போதைப்பொருள் புழக்கத்தை கண்டறிந்தால் பொதுமக்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போதைப்பொருள் தடுப்பு தொடர்பான கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் போதைப்பொருள் புழக்கம் குறித்த தகவல்களை தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும், போதைப்பொருள் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 மூலம் தெரிவிக்கலாம் என்றும் பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் போதைப்பொருள் ஒழிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மூலம் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

 

தொடர்ந்து, இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், கல்லூரி மாணவ, மாணவிகள் மனித சங்கிலியாக இணைந்து “NO TO DRUGS” என்ற வாசகத்தை காட்சிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.சுப்பிரமண்ய பாலசந்திரா, இ.கா.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலமுருகன், நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் ரா.சங்கரநாராயணன், உதவி ஆணையர் (கலால்) அர்ச்சனா, மகளிர் திட்ட அலுவலர் நாநிலதாசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

 

<b> Total Views: 9 </b>

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *