
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அடுத்த கொணலை கிராமத்தில் உள்ள திருச்சி பொறியியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் “போதையில்லா தமிழகம்” என்ற தலைப்பில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரித் தலைவர் முனைவர் சுஜாதா சுப்ரமணியம், செயலாளர் பொறியாளர் சூர்யா சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் த. முத்தமிழ்ச்சுடர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் ப. பிரபாகரன், புல முதல்வர் முனைவர் வி. செல்வகுமார் ஆகியோர் தலைமை வகித்து, போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சிறப்பு விருந்தினராக சிறுகனூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கே. சத்யபிரியா கலந்து கொண்டு, பல்வேறு வகையான போதைப் பொருட்கள், அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் போதைப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், நாட்டின் எதிர்காலம் மாணவர்களை சார்ந்துள்ளதால், போதைப் பொருட்களுக்கு எதிராக மாணவர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
காவல் உதவி ஆய்வாளர் எஸ். புனிதவள்ளி, தவறான பழக்கவழக்கங்களில் மாணவர்கள் சிக்காமல் கல்வியில் கவனம் செலுத்தி, வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

நாட்டு நலப்பணித் திட்ட மாணவச் செயலாளர் கே. பாலமுருகன் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை வாசிக்க, 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் காணொளி வாயிலாக போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

நிகழ்ச்சியின் நிறைவாக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் எஸ். கலைச்செல்வன் நன்றி கூறினார்

