மேட்டூர் அணை தண்ணீர், பயிர்க்கடன் தள்ளுபடி: நாகை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அனல் பறந்த விவாதங்கள்; வெளிநடப்பால் பரபரப்பு!

நாகப்பட்டினம்

 

செய்தியாளர் :விஜய் 

நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளையும், ஆதங்கங்களையும் முன்வைத்துப் பேசினர்.


தலைமைச் செயலக முற்றுகை எச்சரிக்கை
கூட்டத்தில் பேசிய விவசாயி சக்திவேல் “புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு, தனது தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. ஆனால், தற்போதைய அறிவிப்பு அதற்கு முரண்பாடாக அமைந்து விவசாயிகளை ஏமாற்றமடையச் செய்துள்ளது. எனவே, வாக்குறுதியின்படி பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லையெனில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வரும் 30ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம்” என எச்சரித்தார்.


இதே கோரிக்கையை வலியுறுத்திய பாஸ்கரன்”கடந்த 2006ஆம் ஆண்டு முதல்வராகப் பொறுப்பேற்ற மறைந்த முதல்வர் கருணாநிதி, உடனடியாக ரூ.7,500 கோடி பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்து விவசாயிகளைக் காத்தார். அதேபோல தற்போதைய முதல்வரும் விவசாயிகளின் அனைத்து பயிர்க்கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

ஜூன் 12-ல் தண்ணீர் திறக்க கோரிக்கை

கடைமடைப் பகுதியான நாகை மாவட்ட விவசாயம் காவிரி நீரை மட்டுமே நம்பியுள்ளதாகக் குறிப்பிட்ட விவசாயி பிரகாஷ் குறுவை சாகுபடிக்கு நடப்பு ஆண்டில் ஜூன் 12ஆம் தேதியே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இருபோகச் சாகுபடியை மேற்கொள்ள முடியும். தவறினால் ஒருபோக விவசாயமும் பாதிக்கப்பட்டு, கடந்த ஆண்டைப் போல ஒரு லட்சம் ஏக்கர் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பெரு நஷ்டத்திற்கு ஆளாவார்கள்” என கவலை தெரிவித்தார்.

விவசாயி பிரபாகரனும் ஜூன் 12 தண்ணீர் திறப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கடைசித் தவணை நிதியைத் தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தூர்வாரும் பணிகள் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்பு

பாசனக் கால்வாய்களைத் தூர்வாருவது குறித்துப் பேசிய தமிழ்செல்வன் மேட்டூர் அணை திறக்கக் காலதாமதம் ஆவதால், வெண்ணாறு மற்றும் காவிரி வடிநிலக் கோட்டத்திற்கு உட்பட்ட பணிகளை ஆட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து, தூர்வாரும் பணிகளைத் தரமாகச் செய்ய வேண்டும் என்றார்.
விவசாயி மணியன் பேசுகையில், “வேதாரண்யம் தாலுகா மாணங்கொண்டான் வடிகால் வாய்க்கால் மூலம் 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடைந்து வந்தன. தற்போது அங்கு ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதால் அணைத் தண்ணீர் வந்தாலும் பாசனப் பகுதிகளுக்குச் செல்லாது. எனவே, அதனைப் போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும்” என்றார்.

முஜிபுஷரீக்என்ற விவசாயி, அரிச்சந்திரன் ஆற்றின் வேட்டைகாரனிருப்பு கடல் முகப்பு வரை உள்ள மணல் திட்டுகளை அகற்ற வேண்டும் என்றும், மாவட்டத்திலுள்ள ஏரி, குளம், வாய்க்கால்களைத் தூர்வார வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், திருப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ள போலிப் பத்திரப் பதிவு குறித்தும் உரிய ஆய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

திட்ட முறைகேடு புகார் மற்றும் வெளிநடப்பு

விவசாயி கமல்ராம் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வழங்கப்படும் மானிய விலையிலான டிராக்டர் உள்ளிட்ட திட்டங்கள், தகுதியான விவசாயிகளுக்கு மறுக்கப்படுவது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தின் இறுதிப் பகுதியில், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து விவசாயி தனபால் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீரென கோஷங்களை எழுப்பினர். பின்னர், தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

விவசாயிகளின் இந்தக் கோரிக்கைகள் மற்றும் புகார்களைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், உரிய துறைகள் மூலம் பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

<b> Total Views: 37 </b>

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *