
செய்தியாளர் : விஜய்
மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் நேரில் ஆய்வு
நாகப்பட்டினம், ஆக.12: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரையில் நடைபெற்று வரும் கடலரிப்பு தடுப்புப் பணிகள் மற்றும் செருதூர் வெள்ளையாறு முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் கரை பாதுகாப்புச் சுவர் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேளாங்கண்ணி பகுதியில் சுமார் 1,500 மீனவர்கள் வசித்து வருகின்றனர். சுமார் 150 மீன்பிடி படகுகளைக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில், தொடர்ந்து ஏற்பட்டு வரும் கடற்கரை அரிப்பால் படகுகள் நிறுத்தும் பகுதிகள் பாதிக்கப்பட்டு, படகுகள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து மீனவர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு ரூ.17.78 கோடி மதிப்பீட்டில் வேளாங்கண்ணி கிராமத்தில் கடலரிப்பு தடுப்புப் பணிகளை மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 6 நேர்கல் சுவர்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் நிறைவு பெற்றால் கடற்கரை அரிப்பு கட்டுப்படுத்தப்படுவதுடன், கடலலைகள் நேரடியாக கரையைத் தாக்குவது தடுக்கப்படும். மேலும், மீன்பிடி படகுகள், சாலைகள், கட்டிடங்கள், மீன் இறக்கும் இடங்கள் உள்ளிட்ட கடற்கரை வசதிகளும் பாதுகாக்கப்படும்.

தொடர்ந்து செருதூர் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இப்பகுதியில் சுமார் 2,200 மீனவர்கள் வசித்து வருகின்றனர். சுமார் 295 மீன்பிடி படகுகளைக் கொண்டு மீன்பிடித் தொழில் நடைபெற்று வரும் நிலையில், வெள்ளையாறு முகத்துவாரத்தில் அதிகளவில் மணல் திட்டுகள் உருவாகியதால் படகுகள் கடலுக்குச் செல்வதிலும், மீண்டும் கரை திரும்புவதிலும் சிரமம் ஏற்பட்டு வந்தது.
மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையைத் தொடர்ந்து, ரூ.21.83 கோடி மதிப்பீட்டில் கரை பாதுகாப்புச் சுவர் அமைக்கும் பணிக்கு அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி தெற்கு கரையில் 300 மீட்டர், வடக்கு கரையில் 220 மீட்டர் நீளத்திற்கு கரை பாதுகாப்புச் சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பணிகள் நிறைவு பெற்றால் மணல் திட்டுகள் உருவாவது கட்டுப்படுத்தப்பட்டு, மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக இயக்கப்படுவதுடன், மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நிலையும் மேம்படும் என தெரிவிக்கப்பட்டது.
பணிகளை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், பணிகளின் தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்ததுடன், பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து மீனவர்களிடம் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது மீன்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், மீன்வளத்துறை உதவி இயக்குநர் யோகேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்
<b> Total Views: 9 </b>

