போதைக்கு எதிராக ஒன்றிணைவோம்: நாகையில் விழிப்புணர்வு ஓட்டம்

நாகப்பட்டினம்

செய்தியாளர் ; விஜய்

 

நாகப்பட்டினம், ஜூன் 26:

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அவூரித்திடலில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் இன்று நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ஜவாஹிருல்லா, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் த. லதா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமண்ய பாலச்சந்திரா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், தமிழ்நாட்டை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். போதைப்பொருள் பயன்பாடு சமூகத்தின் மிகப்பெரிய எதிரி என்றும், அதை ஒழிக்க பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், போதைப்பொருள் நடமாட்டம் குறித்த தகவல்களை அரசின் போதைப்பொருள் தடுப்பு மொபைல் செயலி மூலம் தெரிவிக்கலாம் என்றும், தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் கூறினார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் ரவிசந்திரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சதீஸ்குமார், உதவி ஆணையர் (கலால்) அர்ச்சனா, நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் லீனா சைமன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

 

<b> Total Views: 8 </b>

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *