
நாகப்பட்டினம்: காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
நாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிதியளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்த பாலகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவிரி மேலாண்மை ஆணையத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழகத்திற்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இதனை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
கடந்த மாத இறுதியில் மழைப்பொழிவு இல்லாததால் கர்நாடகாவில் தண்ணீர் இல்லை என கூறப்பட்டது. ஆனால் தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகளவு மழை பெய்துள்ளதால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. இருப்பினும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டிய ஒன்றிய அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம் என்று கூறுவதுடன் நின்றுவிடாமல், கர்நாடக அரசை தண்ணீர் திறக்க வைக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதற்காக தமிழக முதல்வர் உடனடியாக அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமரை சந்தித்து, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் விவசாயிகளின் பாதிப்புகளை எடுத்துக்கூறி, கர்நாடகாவிடம் இருந்து தண்ணீர் பெற ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
குறுவை பாதிப்புக்கு நிவாரணம்
காவிரி நீர் கிடைக்காததால் குறுவை சாகுபடி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணமும், விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணமும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த நிவாரணம் வழங்கப்படாவிட்டால் அடுத்ததாக சம்பா சாகுபடியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும். எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20-ம் தேதி நாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு
மேலும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாஜக அரசு சீர்குலைத்து வருவதாக பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
எதிர்க்கட்சிகளின் குரலுக்கு உரிய வாய்ப்பு வழங்காமல் நாடாளுமன்றத்தை முடக்கியதை கண்டிக்கிறோம். தொகுதி மறுவரையறை தொடர்பாக சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்தப்படும் என ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அதுபோன்ற சிறப்பு கூட்டம் நடத்தப்படாது என ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் எந்த முயற்சியையும் எதிர்க்கட்சிகள் ஏற்காது. தற்போது உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையே தொடர்ந்து இருக்க வேண்டும். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
டிசம்பர் மாதத்திற்குள் நாடாளுமன்றத்தை கூட்டி, 543 தொகுதிகள் என்ற எண்ணிக்கையை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மாற்றம் செய்யக்கூடாது என்ற சட்டத்திருத்தத்தை கொண்டு வர வேண்டும். இதன் மூலம் மட்டுமே தற்போதைய தொகுதி எண்ணிக்கையை பாதுகாக்க முடியும் என்று பாலகிருஷ்ணன் தெரிவித்தார்
<b> Total Views: 8 </b>

