
சுதர்சனா பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே காளிப்பட்டி பகுதியில் அமைந்துள்ள சுதர்சனா பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
துறையூர் பாலக்கரை பகுதியில் தொடங்கிய பேரணி, திருச்சி சாலை, அண்ணா பேருந்து நிலையம் மற்றும் காவல் நிலையம் வழியாக சென்று நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் சுதர்சனா பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பேரணியை துறையூர் உதவி காவல் ஆய்வாளர் தினேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் பூபாலன் முன்னிலை வகித்தார்.
பேரணியில் மாணவ, மாணவிகள் போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் உடல் மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முழக்கங்களை எழுப்பியபடி சென்றனர். குறிப்பாக, “ஒழிப்போம்! ஒழிப்போம்! போதையை ஒழிப்போம்!”, “போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்!” உள்ளிட்ட விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், போதைப்பொருட்களுக்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவிகள் கைகளில் ஏந்திச் சென்றனர். போதைப்பொருள் பழக்கத்தால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதுடன், குடும்பத்திலும் சமூகத்திலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதை எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் ஞானவேல், கல்லூரி ஆசிரியர்கள், காவல்துறையினர் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
<b> Total Views: 32 </b>

