
திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் அடுத்த கொணலையில் அமைந்துள்ள திருச்சி பொறியியல் கல்லூரியில் நாட்டின் 80-ஆவது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவையொட்டி கல்லூரி வளாகம் தேசியக் கொடி மற்றும் தேசப்பற்று உணர்வை ஏற்படுத்தும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் தொடக்கமாக கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். கலைச்செல்வன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து கல்லூரியின் தலைவர் முனைவர் சுஜாதா சுப்ரமணியம் முன்னிலை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் நடைபெற்ற சிறப்புரையில், சுதந்திர இந்தியாவின் வரலாறு மற்றும் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்தார். குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனைகளான வீரமங்கை வேலு நாச்சியார், குயிலி ஆகியோரின் வீரத்தையும் தியாகத்தையும் பாராட்டிப் பேசினார்.

கல்லூரியின் செயலாளர் பொறியாளர் சூர்யா சுப்பிரமணியம் பேசுகையில், இன்றைய தலைமுறையினர் சுதந்திர தினத்தை வெறும் விடுமுறை நாளாகக் கருதாமல், நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களின் தியாகங்களை அறிந்து கொள்ள வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியா எதிர்கொண்ட சுரண்டல் மற்றும் வஞ்சனைகள் குறித்து இளைய தலைமுறையினர் தெரிந்து கொண்டு, நாட்டின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கல்லூரியின் முதல்வர் முனைவர் ப. பிரபாகரன் பேசுகையில், மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல் உள்ளிட்ட தலைவர்கள் இந்தியாவின் விடுதலைக்காக ஆற்றிய பங்களிப்புகளை நினைவுகூர வேண்டும். அவர்களின் தியாகங்களையும் நாட்டுப்பற்றையும் மாணவர்கள் முன்னுதாரணமாகக் கொண்டு, சுதந்திர இந்தியாவை நல்ல முறையில் வழிநடத்தும் பொறுப்பை ஏற்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
கல்லூரியின் புல முதல்வர் முனைவர் வி. செல்வகுமார் பேசுகையில், இந்தியாவின் சுதந்திரத்திற்காக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தரப்பினரும் தங்களது உயிரையும், செல்வத்தையும் தியாகம் செய்து போராடினர். மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று மக்கள் தங்களால் இயன்ற பங்களிப்புகளை வழங்கி சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களின் தியாகத்தால் கிடைத்த சுதந்திரத்தின் பயனாகவே இன்று நாம் சுதந்திரமாக வாழ்ந்து வருகிறோம். எனவே, சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை என்றும் நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

விழாவில் கல்லூரியின் மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல் (ECE) துறையின் மூன்றாம் ஆண்டு மாணவி விக்னேஸ்வரி பேசுகையில், கொடிகாத்த குமரன், வாஞ்சிநாதன், பகத்சிங், பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த வீரர்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக ஆற்றிய தியாகங்களை நினைவுகூர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அணிவகுப்பு மரியாதையை கல்லூரியின் தலைவர், செயலாளர், முதல்வர் மற்றும் புல முதல்வர் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து, கொடி வணக்கப் பாடல், வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

விழாவில் கல்லூரியின் அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்பாகக் கொண்டாடினர்.
நிகழ்ச்சியின் நிறைவாக நாட்டு நலப்பணித் திட்டத்தின் மற்றொரு ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ்ச்சுடர் நன்றி கூறினார். தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
<b> Total Views: 78 </b>

