
செய்தியாளர் சுபாஷ் செல்வம்
திருச்சி மாவட்டம், புல்லம்பாடி அருகே உள்ள ஆலம்பாடி மேட்டூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் நேரடி நெற்கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இப்பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை அரசு நேரடி நெற்கொள்முதல் நிலையத்தின் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், நெற்கொள்முதல் நிலைய வளாகத்தில் போதிய இடவசதி இருந்தும், நெல் மூட்டைகள் சாலையோரங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சாலைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும், திடீர் மழை பெய்தால் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடையும் அபாயமும் இருப்பதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
அதேபோல், நெற்கொள்முதல் நிலையம் காலியாக இருந்தும் உள்ளே மூட்டைகளை சேமிக்காமல் வெளியே சாலையில் குவித்து வைத்திருப்பது அதிகாரிகளின் அலட்சியத்தைக் காட்டுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். பல முறை புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட நெற்கொள்முதல் அலுவலர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மேலும், சாலையில் குவிந்துள்ள நெல் மூட்டைகள் போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் உடனடி ஆய்வு மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

