திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 100 நாள் ஆட்சி சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன்மோகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணை சபாநாயகர் ரவிசங்கர், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியதுடன், அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என சவால் விடுத்துப் பேசினார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய துணை சபாநாயகர் ரவிசங்கர், “இனி வருகின்ற எந்தத் தேர்தலாக இருந்தாலும் சரி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கவே முடியாது. அப்படி திமுக மீண்டும் ஆட்சி அமைத்துவிட்டால், நான் பொது வாழ்க்கையை விட்டு விலகிச் செல்கிறேன்” என சவால் விடுக்கும் வகையில் பேசினார்.
தொடர்ந்து திமுக ஆட்சியின் செயல்பாடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விமர்சனம் செய்த அவர், “ஊழல் என்று சொன்னாலே திமுகவினர் உடனடியாக எழுந்து எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இது வடிவேலுவின் ஆடு திருடிய கதை போல் இருக்கிறது” என கடுமையாக விமர்சித்தார்.
மேலும், நீண்ட காலமாக தமிழக அரசியலில் முக்கிய கட்சியாக இருந்து வரும் திமுக, கூட்டணி இல்லாமல் தனித்து நின்று தனது பலத்தை நிரூபிக்க தயாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.

உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து நடித்துக் காட்டிய ரவிசங்கர்
பொதுக்கூட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் சபாநாயகரிடம் துண்டுச் சீட்டை கையில் வைத்துக்கொண்டு பேசுவது போன்ற பாவனையை ரவிசங்கர் மேடையில் நடித்துக் காட்டினார். அவரது இந்த செயல் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக ஆட்சிக்கு எதிரான விமர்சனங்கள், தமிழக அரசியல் நிலவரம் மற்றும் வரவிருக்கும் தேர்தல் தொடர்பான கருத்துகளை முன்வைத்து ரவிசங்கர் ஆவேசமாக பேசியதால், துறையூர் பாலக்கரையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட இணைச்செயலாளர் B. மதன், துறையூர் தெற்கு நகர செயலாளர் K. வினோத்குமார், துறையூர் வடக்கு நகர செயலாளர் M. சூர்யா, துறையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் M. தர்மா, துறையூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், துறையூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், துறையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், உப்பிலியபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த், உப்பிலியபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், உப்பிலியபுரம் மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகம், உப்பிலியபுரம் பேரூர் கழக செயலாளர் முத்துகிருஷ்ணன், பாலகிருஷ்ணம்பட்டி பேரூர் கழக செயலாளர் கண்ணன் (எ) கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும், சிறப்பு பேச்சாளர்கள், தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
துறையூரில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டம், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் செயல்பாடுகளை முன்னிறுத்தும் நிகழ்வாக அமைந்ததுடன், திமுகவுக்கு எதிரான கடுமையான அரசியல் விமர்சனங்கள் இடம்பெற்றதால் அப்பகுதியில் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
<b> Total Views: 42 </b>

