
செய்தியாளர் : வசந்த்
பெரம்பலூர் மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் செயல்படாமல் உள்ள கல்குவாரியில் தலையில் காயத்துடன் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தவர் வெற்றிவேல் (27), த/பெ. தமிழரசன் எனத் தெரியவந்துள்ளது. இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு துபாயில் வேலை செய்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். கடந்த ஒரு வாரமாக நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 30) காலை 9.30 மணியளவில் வயலுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்ற வெற்றிவேல், நெடுவாசல் கிராமத்தில் உள்ள செயல்படாத கல்குவாரியில் தலையில் கல்லால் தாக்கப்பட்ட காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இதனைப் பார்த்த பெரம்பலூர் மாவட்டம், கவுள்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (30), த/பெ. வடிவேல் (கல் ஒட்டர்), என்பவர் வெற்றிவேலின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, வெற்றிவேலின் மரணம் குறித்து சரவணனுக்குத் தெரிந்திருக்கலாம் எனச் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள், சரவணனைத் தாக்கியுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சரவணனை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், வெற்றிவேலின் உடலைக் கைப்பற்றிய போலீசார், அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செயல்படாத கல்குவாரியில் இளைஞர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
