
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே புத்தனாம்பட்டியில் செயல்பட்டு வரும் நேரு நினைவுக் கல்லூரியில், உலகளாவிய முக்கியத்துவம் பெற்ற எக்ஸ்டெண்டட் ரியாலிட்டி (XR) மற்றும் டிஜிட்டல் ட்வின் (DT) தொடர்பான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இப்புதிய பாடத்திட்டம், எதிர்காலத்தில் வேகமாக வளர்ச்சி அடையும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைக்கு துணைபுரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்துறை நிறுவனங்களில் XR மற்றும் DT தொடர்பான திறன்களுக்கு அதிகமான தேவை உருவாகி வருவதால், கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கு இது புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என கூறப்படுகிறது.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம், பயனர்கள் செயலிகளுடன் நேரடி தொடர்பு கொண்டிருப்பது போன்ற அனுபவத்தை பெற முடியும். மேலும், விருப்பமான அவதார் உருவங்களை நேரடியாக காட்சி வடிவில் உருவாக்கி அதனுடன் தொடர்பு கொள்ளும் வசதியும் இதில் இடம்பெறும்.
விவசாயம் முதல் வரலாறு வரை பல துறைகளில் இந்த XR & DT தொழில்நுட்பம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
மத்திய திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ் செயல்படும் மீடியா மற்றும் பொழுதுபோக்கு திறன் கழக (MESC) மூத்த ஆலோசகர் சசிகுமார் சதாசிவம் கடந்த ஒரு மாதமாக கல்லூரி மாணவர்களுக்கு இந்த தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு வழங்கி வருகிறார்.

இதுகுறித்து கல்லூரி தலைவர் பொன் பாலசுப்பிரமணியன் கூறுகையில், “தமிழக அரசு கடந்த மார்ச் 12ஆம் தேதி இந்த தொழில்நுட்பம் தொடர்பான கொள்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, உலக அளவில் முதன்முறையாக எங்கள் கல்லூரியில் XR & DT ஆறு மாத பாடத்திட்டமாக தொடங்கப்படுகிறது. கலை மற்றும் அறிவியல் மாணவர்கள் அனைவரும் இதில் சேர்ந்து பயன் பெறலாம்” என்றார்.
உலகளவில் முதன்முறையாக இந்த தொழில்நுட்ப பாடத்திட்டம் தமிழ்நாட்டில், அதுவும் புத்தனாம்பட்டியில் உள்ள நேரு நினைவுக் கல்லூரியில் தொடங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

