அரியலூர் -மழையில் நனைந்த நெல் மூட்டைகள் சேதம்

அரியலூர்

 

அரியலூர் மாவட்டம் மேல வரப்பன்குறிச்சி பகுதியில் இன்று விடியற்காலை முதலே பெய்த மழையால், அங்கு செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதமடைந்துள்ளன.

மேலும் காலை முதலே இடைவிடாமல் பெய்த மழையால், திறந்த வெளியில் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் எந்தவித பாதுகாப்பும் இன்றி மழையில் நனைந்தன. இந்நிலையில் தர்பாய் மூடுகள் அல்லது குடோன் வசதிகள் போதிய அளவில் இல்லாததால், மழைநீர் நேரடியாக மூட்டைகளில் புகுந்து, அவற்றின் தரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல மாதங்களாக உழைத்து விளைந்த நெற்பயிரை அரசு கொள்முதல் நிலையத்தில் ஒப்படைத்த பிறகு, அது பாதுகாப்பின்றி சேதமடைவது மிகவும் வேதனையானது என அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாதது குறித்து அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மழையில் நனைந்த நெல் மூட்டைகள் நீண்ட நேரம் அப்படியே இருந்தால், அவற்றில் பூஞ்சை உருவாகும் அபாயம் உள்ளது. இது நெல் தரத்தை குறைத்து, சந்தையில் விற்பனை செய்ய முடியாத நிலையை உருவாக்கும். இதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும், அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் சுபாஷ் செல்வம்

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *