
விக்கிரமங்கலம், ஏப்ரல் 5:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட ரோந்து பணியின் போது சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.
விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் நேற்று காலை விக்கிரமங்கலம்–விக்கைகாட்டி சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருக்கோணம் பிரிவு சாலை அருகே எதிரே வந்த டிராக்டரை சந்தேகத்தின் பேரில் மறித்து சோதனை செய்தனர்.
சோதனையில், அந்த டிராக்டரில் சுண்டக்குடி மருதையாறு படுகை பகுதியில் இருந்து அனுமதியின்றி மணல் எடுத்து செட்டி திருக்கோணம் பகுதிக்கு கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் டிராக்டரை உடனடியாக பறிமுதல் செய்தனர்.
மேலும், டிராக்டரை ஓட்டி வந்த அரியலூர் மாவட்டம் செட்டி திருக்கோணம் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் (27) என்பவரை கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

