துறையூர் அருகே மீண்டும் பேருந்து விபத்து – 21 பேர் காயம் அலட்சிய அதிகாரிகள் தூங்குகிறார்களா?

துறையூர்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கிழக்குவாடி பகுதியில் இன்று நடைபெற்ற ஆம்னி பேருந்து விபத்து, அதிகாரிகளின் செயலற்ற தன்மையை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. சிதம்பரத்திலிருந்து கோவை நோக்கி சென்ற தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 21 பேர் காயமடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த துறையூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழப்பு எதுவும் ஏற்படாதது அதிர்ஷ்டமாக இருந்தாலும், இந்த விபத்து பெரிய பேரழிவாக மாறியிருக்கக் கூடிய நிலை இருந்தது.

விபத்துக்குப் பிறகு ஓட்டுநர் தப்பிச் சென்றதாக கூறப்படுவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இந்த விபத்து சாதாரண விபத்தாக மட்டும் பார்க்க முடியாது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கிழக்குவாடி பகுதி சாலை பல ஆண்டுகளாக அபாயகரமான நிலையில் இருந்தும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

“ஒவ்வொரு விபத்திற்குப் பிறகும் அதிகாரிகள் வருவார்கள்… ஆய்வு செய்வார்கள்… அதற்குப் பிறகு மறுபடியும் அமைதி! இது ஆய்வா? அல்லது கண்மூடித்தனமா?” என பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சாலை பராமரிப்பு இல்லாமை, எச்சரிக்கை பலகைகள் இல்லாதது, வேக கட்டுப்பாட்டு ஏற்பாடுகள் செய்யாதது – இவை அனைத்தும் அதிகாரிகளின் நேரடி அலட்சியத்தின் விளைவாகவே இந்த விபத்துகள் நடைபெறுகின்றன என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தொடர் உயிரிழப்பு நடந்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்ற கேள்வி தற்போது பெரும் விவாதமாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இது விபத்து அல்ல… திட்டமிட்ட அலட்சியம். சாலை பாதுகாப்பு என்பது அதிகாரிகளின் முதன்மை பொறுப்பு. அதை நிறைவேற்றாதவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கிழக்குவாடி பகுதியை விபத்து மண்டலம் என அறிவித்து உடனடி சாலை சீரமைப்பு, வேகக் கட்டுப்பாட்டு கருவிகள், எச்சரிக்கை பலகைகள், காவல் கண்காணிப்பு ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை உடனடியாகத் தலையிட்டு, இந்த விபத்து பகுதியைப் போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்ய வேண்டும். விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தவறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *